செய்திகள்
வெளிநாட்டு தூதர்கள் குழு

காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் குழு சுற்றுப்பயணம் - உலக நாடுகளை ஏமாற்றும் செயல் என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

Published On 2021-02-17 19:12 GMT   |   Update On 2021-02-17 19:12 GMT
காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் குழு நேற்று சுற்றுப்பயணம் செய்தனர். இது உலக நாடுகளை ஏமாற்றும் செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள் குழு நேற்று சுற்றுப்பயணம் செய்தனர். இது உலக நாடுகளை ஏமாற்றும் செயல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இது உலக அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேரில் காஷ்மீர் வந்து நிலைமை குறித்து வெளிநாட்டு தூதர்கள் பார்வையிட மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி கடந்த ஆண்டு (2020) அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்கள் குழுவினர் காஷ்மீர் வந்து அங்குள்ள நிலைமையை நேரில் கண்டறிந்தனர்.

இதற்கிடையே காஷ்மீரில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த சூழ்நிலையில் நேற்று மீண்டும் வெளிநாட்டு தூதர்கள் குழுவினர் 2 நாள் பயணமாக காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளனர். இந்த குழுவில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்களோடு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பை சேர்ந்த மலேசியா, வங்காளதேசம், சீகெல் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் தூதர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய காஷ்மீரில் உள்ள மகம் பகுதிக்கு நேற்று சென்ற தூதர்கள் குழு அங்கிருந்த பொதுமக்களோடும், மாணவர்களுடனும் கலந்துரையாடினர். பின்னர் ஸ்ரீநகர் மேயர், மாவட்ட கவுன்சில் தலைவர்களை சந்தித்து பேசினர்.

தூதர்களை சந்தித்த புத்கம் மாவட்ட குழுத்தலைவர் நசீர் அகமது கூறுகையில், ‘புத்கம் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம். இங்குள்ள மக்களுக்கு உணவு, உடை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அவசியம். இதுகுறித்தே விவாதிக்கப்பட்டது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே வெளிநாட்டு தூதர்கள் குழு இன்று (வியாழக்கிழமை) ஜம்மு செல்கிறது. கவர்னர் மனோஜ் சின்காவையும் சந்தித்து பேசுகிறார்கள்.

வெளிநாட்டு தூதர்கள் குழு வருகையை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சைபுதீன் சோஷ், ‘தூதர்கள் வருகை எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது. இதனால் ஒரு பயனும் இல்லை’ என்று கூறினார்.

இதேபோல் ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் மிர்வாஸ் உமர் பரூக்கும் இது உலக நாடுகளை ஏமாற்றும் செயல் என்று விமர்சனம் செய்துள்ளார்.
Tags:    

Similar News