செய்திகள்
பாதுகாப்பு பணியில் வீரர்கள்

ஜம்மு காஷ்மீரின் களநிலவரம் என்ன? -20 நாடுகளின் தூதர்கள் இன்று சுற்றுப்பயணம்

Published On 2021-02-17 04:14 GMT   |   Update On 2021-02-17 04:14 GMT
ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை ஆராய்ந்து அறிந்துகொள்வதற்காக 20 வெளிநாட்டு தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் மற்றும் வன்முறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

இதனால் எழுந்த அரசியல் விமர்சனங்களைத் தொடர்ந்து வெளிநாடுகளின் தூதர்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழலையும் இயல்பு நிலையையும் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளை வெளி நாடுகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் வெளிநாடுகளின் தூதர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் பயணம் மேற்கொண்டு, ராணுவத்தினர், அரசியல் தலைவர்களை சந்தித்து நிலைமைய ஆராய்ந்தனர். அதன்பின்னர் கொரோனா அச்சம், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட 20 வெளிநாட்டு தூதர்கள் இன்று முதல் 2 நாட்கள் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இன்று ஸ்ரீநகர் வரும் அவர்கள் நாளை ஜம்மு காஷ்மீர் செல்வார்கள். 

முந்தைய இரண்டு சுற்றுப்பயணங்கள் போன்று, இந்த முறையும் அரசு அதிகாரிகள், சிவில் சமூக குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து நிலவரங்களை ஆராய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியின் (பிஏஜிடி) தலைவரை தூதர்கள் சந்திப்பார்களா? என்பது உறுதி செய்யப்படவில்லை. 

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களைத் தவிர, தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) போன்ற பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களை இந்த முறை தூதர்கள் சந்திப்பார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

வெளிநாட்டு தூதர்கள் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News