செய்திகள்
மந்திரி சுதாகர்

கர்நாடக பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: மந்திரி சுதாகர்

Published On 2021-02-17 02:52 GMT   |   Update On 2021-02-17 02:52 GMT
கர்நாடக பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் பட்டமளிப்பு விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில் கூறியதாவது:-

அரசின் சுகாதாரத்துறையில் அனைத்து நிலைகளிலும் சேர்த்து லட்சக்கணக்கானோர் பணியாற்றுகிறார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி சுகாதாரத்துறை செயலாற்றவில்லை என்ற கருத்து நிலவுகிறது. டாக்டர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் வரும்போது எப்படி நடத்துகிறார்களோ அதே போல் அனைத்து நோயாளிகளையும் நடத்த வேண்டும்.

முதல்-மந்திரி எடியூரப்பா விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அதில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். ஆனால் 25 சதவீத சுகாதார மையங்கள் மட்டுமே கிராமங்களில் உள்ளன. அதனால் டாக்டர்கள் கிராமங்களில் மருத்துவ சேவையாற்ற வேண்டும்.

சுகாதாரத்துறைக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புறங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. அந்த சுகாதார மையங்களை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ரூ.2.3 லட்சம் கோடி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 137 சதவீதம் அதிகம் ஆகும்.

மாணவ பருவம் மிக முக்கியமானது. கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு வெளி உலகில் காலடி எடுத்து வைக்க வேண்டும். ஆனால் கல்லூரி முடிந்த பிறகு கற்றல் என்பது முடிவடைவது இல்லை. கற்றல், ஆராய்ச்சி, ஆய்வு போன்றவை வாழ்நாள் முழுவதும் நடைபெறக்கூடியது. கொரோனா நெருக்கடி நேரத்தில் டாக்டர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி உள்ளனர். தற்போது நாம் கொரோனாவின் கடைசி நிலையில் உள்ளோம். கொரோனா பரவத்தொடங்கிய 10 மாதங்களில் அதற்கு தடுப்பூசி கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News