செய்திகள்
டிராக்டர் ஓட்டிய ராகுல்

பிரதமர் கொடுத்த விருப்ப தேர்வுகள் இவைதான்... விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் விளாசல்

Published On 2021-02-13 17:24 GMT   |   Update On 2021-02-13 17:24 GMT
விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் பேச்சு நடத்த மாட்டார்கள் என்றார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ரூபங்கர் பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி பங்கேற்றார். பஞ்சாபியர்களின் பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்ட ராகுல், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முதல்வர் அசோக் கெலாட் உடன் இணைந்து டிராக்டர் ஓட்டினார்.

இக்கூட்டத்தில்  ராகுல்காந்தி பேசியதாவது:-

நாட்டின் 40 சதவீத மக்கள் விவசாயத் தொழிலில் உள்ளனர். இது 40 சதவீத மக்களின் வணிகம் ஆகும். இதில் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த முழு வணிகத்தையும் தனது இரு நண்பர்களுக்கு கொடுக்க பிரதமர் மோடி விரும்புகிறார். இதுதான் வேளாண் சட்டங்களின் நோக்கம்.

புதிய வேளாண் சட்டங்களால் பசி, வேலைவாய்ப்பின்மை, தற்கொலை போன்றவை அதிகரிக்கும். பிரதமர் விருப்பத் தேர்வுகளை தருவதாக கூறுகிறார். ஆம்... பசி, வேலையின்மை மற்றும் தற்கொலை ஆகியவற்றை அவர் கொடுத்துள்ளார்.

பிரதமர் விவசாயிகளுடன் பேச்சு நடத்த விரும்புகிறார், ஆனால் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை அவர்கள் பேச்சு நடத்த மாட்டார்கள். விவசாயம் பாரத மாதாவுக்கு சொந்தமானது, தொழிலதிபர்களுக்கு அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News