செய்திகள்
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி

மராட்டிய கவர்னருக்கு அரசு விமானம் மறுப்பு - ஏறி அமர்ந்த பிறகு இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு

Published On 2021-02-11 21:53 GMT   |   Update On 2021-02-11 21:53 GMT
மராட்டிய முதல்-மந்திரியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அரசு விமானம் மறுக்கப்பட்டு உள்ளது.
மும்பை:

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசுக்கும், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே பனிப்போர் நிலவி வருகிறது.

குறிப்பாக ஊரடங்கின்போது கோவில்களை திறக்காத விவகாரத்தில், சிவசேனா மதசார்பற்ற கட்சியாக மாறிவிட்டதா என கவா்னர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவர்னருக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

தற்போது மராட்டிய மேல்-சபைக்கு புதிதாக 12 உறுப்பினர்களை (எம்.எல்.சி.க்கள்) நியமிக்கும் விவகாரத்தில் மாநில அரசு, கவர்னர் இடையே மோதல் வெடித்து உள்ளது.

இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தனது சொந்த மாநிலமான உத்தரகாண்ட் செல்ல மராட்டிய அரசுக்கு சொந்தமான வி.வி.ஐ.பி.க்களுக்கான விமானத்தில் பயணம் செய்ய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி திட்டமிட்டு இருந்தார்.

இதற்காக அவர் டேராடூன் செல்ல மும்பை விமான நிலையத்துக்கு நேற்று காலை 10 மணியளவில் வந்தார். மேலும் புறப்படுவதற்காக அரசு விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்டார். சுமார் 15 நிமிடம் கவர்னர் விமானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விமானம் புறப்படாமல் இருந்து உள்ளது.

கவர்னர் அரசு விமானத்தில் பயணம் செய்ய மாநில அரசின் அனுமதி கிடைக்கவில்லை என விமானி தெரிவித்தார். ராஜ்பவன் அதிகாரிகள் அரசிடம் ஒப்புதல் பெற முயன்றும் பயன் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கவர்னர் அந்த விமானத்தில் இருந்து இறங்கி செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கவர்னர் மாளிகை அதிகாரிகள், பயணிகள் விமானத்தில் டிக்கெட் எடுத்தனர். அதன் பிறகு மதியம் 12.15 மணியளவில் கவர்னர் டேராடூனுக்கு புறப்பட்டு சென்றார்.

கவர்னருக்கு அரசு விமானம் மறுக்கப்பட்டதற்கு மராட்டிய பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News