செய்திகள்
அமித் ஷா

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்ததும் சிஏஏ அமல் - அமித்ஷா

Published On 2021-02-11 20:36 GMT   |   Update On 2021-02-11 20:48 GMT
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
கொல்கத்தா:

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஒரு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு இங்கு கிடைத்த வெற்றி சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என அக்கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கு தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் தாக்கூர் நகர் பகுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. தனிப்பட்ட வகையில் இங்கு மீண்டும் வந்து குழப்பங்களை தீர்த்து வைப்பேன் .இது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை . சிஏஏ குறித்து இஸ்லாமியர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை .

நாங்கள் ஒரு தவறான வாக்குறுதியை அளித்ததாக மம்தா  கூறினார். அவர் குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்க்கத் தொடங்கினார், அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். பா.ஜ.க. எப்போதும் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. நாங்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்தோம், அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News