செய்திகள்
சரத்பவார்

விவசாயிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சரத்பவார்

Published On 2021-02-09 01:46 GMT   |   Update On 2021-02-09 01:46 GMT
விவசாயிகளுடன் பிரதமர், மூத்த மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.
மும்பை :

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதில் முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் போராட்டம் 2 மாதங்களுக்கு மேல் நடந்து வருகிறது.

இந்தநிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவர்களுடன் பிரதமர் மற்றும் மூத்த மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " விவசாய அமைப்புகளுடன் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி போன்ற மூத்த மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மந்திரி பியூஸ் கோயல் மற்றும் ஒரு சில மத்திய மந்திரிகள் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பியூஸ் கோயல் மும்பையை சேர்ந்தவர். ஆனால் அவருக்கு விவசாயத்தை பற்றி எந்தளவுக்கு தெரியும் என்பது தெரியவில்லை.

விவசாயம் என்பது மாநில விவகாரம். எனவே மாநில அரசுடன் கலந்தாலோசித்த பின்பு தான் மத்திய அரசு இதுகுறித்து சட்டங்களை இயற்றவேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தாமல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

வேளாண் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் மாறுப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் அதை தீர்க்க முடியும்" என்றார்.
Tags:    

Similar News