செய்திகள்
மந்திரி சுதாகர்

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பும் எதிர்க்கட்சிகள்: மந்திரி சுதாகர் குற்றச்சாட்டு

Published On 2021-02-08 02:41 GMT   |   Update On 2021-02-08 02:41 GMT
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் குற்றம்சாட்டினார்.
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதாவின் சமூக வலைத்தள பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

முன்பு பத்திரிகை துறை ஒரு அரசை மாற்றும் வல்லமை படைத்ததாக இருந்தது. காட்சி ஊடகங்கள் பெரிய அளவில் வளர்ந்துவிட்டன. இப்போது சமூக வலைத்தளம் வளர்ந்துள்ளது. இந்த சமூக வலைத்தளத்தில் ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை கூற முடியும். அரசியலில் சமூக வலைத்தளத்தில் வெற்றிகரமாக பயன்படுத்த முடியும்.

மக்கள் பிரதிநிதிகள் செய்யும் பணிகளை சமூக வலைத்தளத்தில் பகிரலாம். சில வாக்காளர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாக்களிக்கிறார்கள். அத்தகையவர்கள் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை உள்ளனர். இத்தகைய வாக்காளர்களுக்கு நாம் செய்யும் வளர்ச்சி பணிகளை தெரிவிக்க வேண்டியது அவசியம். பா.ஜனதாவை பொறுத்தவரையில் தேர்தல் அறிக்கையே நமக்கு பகவத் கீதையை போன்றது.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மக்கள் நம்மை நிராகரித்துவிடுவார்கள். மக்கள் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அவர்கள் அனைவருமே சமூக வலைத்தளங்களை பார்க்கிறார்கள். அதனால் சமூக வலைத்தள பிரிவினர், நமது கட்சியை பலப்படுத்த தேவையான தகவல்களை பகிர வேண்டும். இது தேர்தலில் நமக்கு உதவும்.

நானும் சமூக வலைத்தளத்தில் எனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன். பிரதமர் மோடிக்கு சமூக வலைத்தளத்தில் 10 கோடி பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இது நமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்ற தகவலை பரப்ப வேண்டாம்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News