செய்திகள்
யோகி ஆதித்யநாத்

அயோத்தியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுங்கள்: அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு

Published On 2021-02-08 02:23 GMT   |   Update On 2021-02-08 02:23 GMT
உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சர்வதேச சுற்றுலா பயணிகளும் அயோத்திக்கு வர ஆர்வமாக உள்ளனர். எனவே அயோத்தியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக ஆக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
அயோத்தி :

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், நேற்று ஒரு நாள் பயணமாக அயோத்திக்கு சென்றார். முதலில், ராம ஜென்மபூமியில் வழிபட்டார். அங்குள்ள அனுமன் கோவிலுக்கு சென்றாா். துறவிகளை சந்தித்து பேசினார்.

பின்னர், ராமர் கதை அருங்காட்சியகத்தில், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அயோத்தியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது, அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருவதால், அயோத்தி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சர்வதேச சுற்றுலா பயணிகளும் அயோத்திக்கு வர ஆர்வமாக உள்ளனர்.

நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, அயோத்தியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுங்கள். அதற்கு இப்போது நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துங்கள். குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.

நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை உரிய காலத்துக்குள் செய்யுங்கள். புதிய உள்கட்டமைப்புகள் குறித்து விளக்குவதற்கு சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

ஹரித்துவாரில் ஹரி படித்துறை இருப்பதுபோல், இங்கு ராமர் படித்துறை உருவாக்க வேண்டும். சரயு நதியில் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட வேண்டும். சரயு ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கழிவுநீரை சுத்திகரித்து பாசன வசதிக்கு பயன்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும். அனைத்து படித்துறைகளிலும் விளக்கு வசதி இருக்க வேண்டும். பசுமை பகுதிகளில் மூலிகை தாவரங்கள் நடப்பட வேண்டும்.

சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டும். முக்கியமான இடங்களில் வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு எந்த இடையூறும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சாலை அகலப்படுத்தியதால் அப்புறப்படுத்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடம் பேசி, அவர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி நிர்வாகம், அயோத்தியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். விமான நிலையம், பஸ் நிலையம் மற்றும் ரெயில்வே தொடர்பான பணிகளை முன்னுரிமை அடிப்படையில் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News