செய்திகள்
கோப்பு படம்

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Published On 2021-02-07 04:29 GMT   |   Update On 2021-02-07 04:29 GMT
நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வேகமாக நடந்து வரும் இந்த பணிகள் மூலம் இதுவரை 50 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை இன்னும் வேகப்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு நாளும் தடுப்பூசி போடப்படும் நபர்களின் எண்ணிக்கையில் உள்ள மாறுபாட்டை ஆய்வு செய்து, அவற்றை அதிகரிக்குமாறு மாநில சுகாதார செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். 

கோவின் டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

சாத்தியமாகும் இடங்களில் ஒரே நேரத்தில் தடுப்பூசி அமர்வுகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு சிறப்பு மூலோபாயங்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

மேலும் மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டார அளவில் அடிக்கடி கூட்டங்கள் நடத்தி சவால்களை ஆய்வு செய்யவும், கள நிலவரங்களை உணர்ந்து கொள்ளவும், பிரச்சினைகளை தீர்க்கவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன.

அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் பிப்ரவரி 20-ந்தேதிக்கு முன் ஒருமுறையாவது தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். இதைப்போல அனைத்து முன்கள வீரர்களுக்கும் மார்ச் 6-ந்தேதிக்கு முன் ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட 16-ந்தேதி முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், வருகிற 13-ந்தேதி 2-வது டோஸ் போட்டுக்கொள்வதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Tags:    

Similar News