செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 கோடியை கடந்தது

Published On 2021-02-07 01:12 GMT   |   Update On 2021-02-07 01:12 GMT
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 கோடியை கடந்து விட்டது.
புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில், கொரோனா பரிசோதனையும் முக்கியமானது. இதனால் தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த முடியும்.

மேலும் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி, தொற்று சங்கிலியை உடைக்க வழி ஏற்படும். இதனால் கொரோனா பரிசோதனைகளுக்கு அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவும் கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து அதிகப்படுத்தியது. இந்தியாவில் தொற்று கண்டறியப்பட்ட தொடக்க நாட்களில் மும்பையில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் மட்டுமே கொரோனா பரிசோதனைகள் நடந்து வந்தன.

ஆனால் பின்னர் இந்த வசதிகளை நாடு முழுவதும் அதிகரிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் என நாடு முழுவதும் தற்போது 2,369 பரிசோதனை கூடங்களில் கொரோனா பரிசோதனைகள் இரவு-பகலாக நடந்து வருகின்றன.

இந்த ஆய்வகங்கள் மூலம் நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. அதேநேரம் ஒருநாளில் 15 லட்சம் பரிசோதனை செய்யும் திறனையும் நாடு ஏற்கனவே பெற்று உள்ளது.

இவ்வாறு அதிகமாக நடந்து வரும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை தற்போது 20 கோடியை கடந்து விட்டது. அதாவது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட 7 லட்சத்து 40 ஆயிரத்து 794 பரிசோதனைகளையும் சேர்த்து மொத்தம் 20 கோடியே 6 லட்சத்து 72 ஆயிரத்து 589 பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் கூறியுள்ளது.

இதற்கிடையே நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 11 ஆயிரத்து 713 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 14 ஆயிரத்து 304 ஆகியிருக்கிறது.

நாட்டின் ஒரு நாள் பலி எண்ணிக்கை 100-க்கும் கீழே சரிந்து விட்டது. நேற்று காலை 8 மணி வரையிலான ஒரு நாளில் வெறும் 95 பேர் மட்டுமே கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர்.

இதில் மராட்டியர்கள் மட்டுமே 40 பேர் ஆவர். அவர்களை தொடர்ந்து கேரளவாசிகள் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவின் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 918 ஆக அதிகரித்து இருக்கிறது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1.43 சதவீதம் ஆகும்.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 1 கோடியே 5 லட்சத்து 10 ஆயிரத்து 796 பேர் மீண்டு விட்டனர். இது 97.19 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ஒட்டுமொத்த பாதிப்பில் வெறும் 1.37 சதவீதத்தினரே சிகிச்சையில் உள்ளனர். அதாவது நேற்று காலை நிலவரப்படி வெறும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 590 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
Tags:    

Similar News