செய்திகள்
நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

விவசாயிகளின் சக்கா ஜாம் போராட்டம் தொடங்கியது

Published On 2021-02-06 07:20 GMT   |   Update On 2021-02-06 07:20 GMT
விவசாயிகளின் சக்கா ஜாம் போராட்டம் தொடங்கியது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இன்று நாடு முழுவதும் விவசாயிகள் சக்கா ஜாம் எனப்படும் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நெடுஞ்சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

டெல்லியில் கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதால், இன்றைய விவசாயிகளின் சாலை மறியல் போராட்டங்கள் எதிரொலியாக நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

டெல்லியில் பாதுகாப்பு பணிக்காக டெல்லி போலீசார், ரிசர்வ் போலீஸ் படை மற்றும் துணை ராணுவப்படையினர் 50 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் டெல்லியின் எல்லை பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு நிபுணர் குழுவும் மற்றும் மோப்ப நாய்களும் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மார்க்கெட் பகுதிகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

எல்லை பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தன்று ஏற்பட்ட வன்முறைபோல அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக இருந்தனர்.

டெல்லியின் எல்லை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

பதற்றம் நிறைந்த பகுதிகளான காளிந்தி குஞ்ச், அக்‌ஷர்தாம், நாரைனா மற்றும் நரேலா ஆகிய இடங்களில் கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன. டெல்லி- நொய்டா பாதையான காளிந்தி குஞ்ச் எல்லைப்பகுதி முற்றிலுமாக மூடப்பட்டது. மற்ற இடங்களில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

டெல்லி பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. போலீஸ் ரோந்து வாகனங்களும் தயார் நிலையில் இருந்தன.

முக்கிய எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. காசிப்பூர் எல்லை பகுதி வழியாக விவசாயிகள் டிராக்டர்களுடன் புகுந்து விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதி போக்குவரத்து முடக்கப்பட்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வன்முறை ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
Tags:    

Similar News