செய்திகள்
டெல்லி என்சிஆர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவப் படைகள்

விவசாயிகள் இன்று சக்கா ஜாம் போராட்டம்: டெல்லி-என்.சி.ஆர் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2021-02-06 04:24 GMT   |   Update On 2021-02-06 04:24 GMT
விவசாயிகள் இன்று சக்கா ஜாம் போராட்டம் நடத்துவதையொட்டி அசம்பாவிதத்தை தவிர்க்க டெல்லி-என்.சி.ஆர் பகுதிகளில் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 6-ந் தேதி (இன்று) டெல்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

ஏற்கனவே குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி அதில் பெரும் வன்முறைகள் ஏற்பட்ட நிலையில், இந்த சாலை மறியல் போராட்டத்தில் போலீசார் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, சிங்கு, சிக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

காசிப்பூர் எல்லையில் தடுப்பு வேலிகளுக்கு பின்னால் சாலைகளில் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டது. மொத்தத்தில் தலைநகர் டெல்லி, போலீஸ் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகளின் 'சக்கா ஜாம்' அழைப்புக்கு மத்தியில் அசம்பாவிதத்தை தவிர்க்க டெல்லி காவல்துறைக்கு உதவுவதற்காக, எல்லைகள் உட்பட டெல்லி-என்.சி.ஆரின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காசிப்பூர் எல்லையில் முள் கம்பிகள் சுற்றப்பட்ட பேரிகார்டுகளை டெல்லி காவல்துறை அமைத்துள்ளது.
Tags:    

Similar News