செய்திகள்
சி.டி.ரவி

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது: சி.டி.ரவி

Published On 2021-02-06 02:25 GMT   |   Update On 2021-02-06 02:25 GMT
அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடப்பதாக தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.
பெங்களூரு :

தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் வேல் யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழக மக்கள் மொழி, கலாசாரத்தை உணர்வுப்பூர்வமாக நேசிக்கிறார்கள். பா.ஜனதா சார்பில் நம்ம ஊரு பொங்கல் கொண்டாடினோம். அதில் சாதி, மதங்களை கடந்து அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். தற்போது தமிழகத்தில் பா.ஜனதா பக்கம் மக்கள் வருவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.

உள்ளூர் பிரச்சினைகளை கண்டறிந்து அதுகுறித்து போராடும்படி எங்கள் கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மக்கள் செல்வாக்கு உள்ள கட்சியாக பா.ஜனதா மாறும். மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் உருவானால், அதன் மூலம் கட்சி வலுவடையும். இது நிதானமாக நடந்து வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது.

இதில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று எங்கள் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு எடுத்துள்ளது. எத்தனை இடங்கள் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எத்தனை இடங்களில் நாங்கள் கேட்கிறோம் என்பதை விட, எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதே முக்கியம்.

ஆட்சியில் பா.ஜனதா பங்கு கொள்வது குறித்து தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்வோம். தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா இரட்டை இலக்க எண்களில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் நோக்கம். கேரளாவில் கட்சியை வலுப்படுத்த நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்களின் நோக்கம். சசிகலா வருகை என்பது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். இந்த விஷயத்தில் அ.தி.மு.க. என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு எங்களின் ஆதரவு உண்டு.

அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் அவர்கள் முதல்-மந்திரி வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. இன்னும் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து அ.தி.மு.க. முடிவு செய்யும்.

தி.மு.க. ஊழல் கட்சி. அக்கட்சியினர் அராஜகமாக செயல்படுகிறார்கள். அதனால் அவர்களை பார்த்து மக்கள் பயப்படுகிறார்கள். மக்கள் தி.மு.க.வை தோற்கடிக்க நினைக்கிறார்கள். அவர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள். தேர்தலில் சாதி முக்கிய பங்காற்றுகிறது. அ.தி.மு.க. அரசுக்கு எதிராக எதிர்ப்பலை என்பது இல்லை. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அதிகம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

தி.மு.க.வினர், திராவிட அரசியல் என்று சொல்கிறார்கள். திராவிட அரசியல் என்றால் குடும்ப அரசியல் செய்வதா?. சாதியா?. தமிழ் கலாசாரத்தை தூக்கி பிடிப்பது தான் திராவிட அரசியல். கடவுள்களை பூஜிப்பது தான் திராவிட அரசியல். அதை எதிர்ப்பது அல்ல. முருக கடவுளை அவமதிக்கும் வேலையை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செய்கிறார்கள். இது எப்படி திராவிட கலாசாரம் ஆகும்.

திராவிட பெயரில் அவர்கள் திராவிடர் கலாசாரத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்திற்கு இதுவரை துறைமுகம், நெடுஞ்சாலை, மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரூ.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

11 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 13 நகரங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் பண்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைக்கிறார். அவர் எங்கு சென்றாலும் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் கலாசாரத்தை குறிப்பிட தவறுவது இல்லை. தமிழ் கலாசாரத்தை காக்க காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. தமிழ் கலாசாரத்திற்கு எதிரானவர்கள் யார் என்பதை நீங்களே கூறுங்கள்.

பா.ஜனதா தமிழர் விரோத கட்சி என்று தி.மு.க. சொல்கிறது. இதை நம்ப தமிழ் மக்கள் தயாராக இல்லை. பா.ஜனதாவில் பிரபலமானவர்கள் நிறைய பேர் வந்து சேருகிறார்கள். கராத்தே தியாகராஜன் பா.ஜனதாவுக்கு வருகிறார். ஓய்வு பெற்ற நீதிபதி, ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்துபவர் என பல்வேறு தரப்பினர் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளனர். இது பா.ஜனதாவின் வளர்ச்சியை காட்டுகிறது.

பிரதமர் மோடி வருகிற 14-ந் தமிழகம் வருகிறார். அவர் வந்து சென்ற பிறகு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த மாத இறுதிக்குள் மீண்டும் தமிழகம் வரவுள்ளார்.நாங்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். நான் வருகிற 11-ந் தேதி முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறேன். பா.ஜனதா தேசிய கட்சி. காவிரி பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களின் நலனும் காக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும்.

தமிழக தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு தேர்தல் அறிக்கையும், பா.ஜனதா தனியாக ஒரு தேர்தல் அறிக்கையும் வெளியிடும். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது தமிழக மீனவர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். இப்போது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தலையிட்டு, இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்களை விடுவித்தார். படகுகள் மீட்கப்பட்டன. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. இதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னரின் முடிவை நாங்கள் ஏற்கிறோம். ராஜீவ்காந்தி கொலையை ஏற்க மாட்டோம். பயங்கரவாதிகளை ஆதரிக்க மாட்டோம்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
Tags:    

Similar News