செய்திகள்
ஜார்க்கண்ட் வேளாண் மந்திரி பாதல் பத்ராலெக்

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஜார்க்கண்ட் வேளாண் மந்திரி ஆதரவு

Published On 2021-02-02 23:01 GMT   |   Update On 2021-02-02 23:01 GMT
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஜார்க்கண்ட் வேளாண் மந்திரி பாதல் பத்ராலெக் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் வேளாண்மைத்துறை மந்திரி பாதல் பத்ராலெக், இன்று காசிப்பூர் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார். விவசாயிகளின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்த அவர் மத்திய அரசின் கைப்பாவையாக டெல்லி போலீஸ் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கிடையில் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால், நாடு தழுவிய டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்க அமைப்பினர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News