செய்திகள்
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்

பெங்களூருவில் 13வது சர்வதேச விமான கண்காட்சி நாளை தொடக்கம் - ராஜ்நாத் சிங் பங்கேற்பு

Published On 2021-02-01 23:53 GMT   |   Update On 2021-02-01 23:56 GMT
பெங்களூருவில் நாளை தொடங்கும் 13-வது சர்வதேச விமான கண்காட்சியை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு:

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் 13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி தொடக்க விழா பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நாளை காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில் மத்திய ராணுவத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து முதல் மந்திரி எடியூரப்பா கர்நாடக அரங்கினை தொடங்கி வைக்கிறார்.

அதன் பிறகு பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டு தூதர்களுடன் முதல் மந்திரி எடியூரப்பா கலந்துரையாடுகிறார். நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு கர்நாடகத்தில் விமானத்துறை மற்றும் பாதுகாப்புத் துறைக்கு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடக்கிறது. அன்று வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள விருந்தினர்களுக்கு முதல் மந்திரி எடியூரப்பா ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்து அளிக்கிறார்.

இந்த கண்காட்சியின் கடைசி நாளான 5-ம் தேதி போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை போர் விமானங்களின் சாகச காட்சிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. வணிக ரீதியிலான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த போர் விமானங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றன. அதன் திறனை சாகசம் மூலம் வெளிப்படுத்த உள்ளது.

முன்பதிவு செய்து அனுமதி பெற்றவர்கள், 72 மணி நேரத்திற்கு முன் பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அதாவது உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல், கைகளுக்கு சானிடைசர் திரவத்தை வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. விமான கண்காட்சியையொட்டி எலகங்கா விமானப்படை தளத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ள வசதியாக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு இயற்கை பேரிடர் மீட்பு குழுவும் அங்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமான கண்காட்சியையொட்டி எலகங்கா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.

இந்த சர்வதேச விமான கண்காட்சி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெங்களூருவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக இந்த கண்காட்சி 5 நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக கண்காட்சி நடைபெறும் நாட்கள் 3 ஆக குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News