செய்திகள்
வரி

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை- மாத சம்பளம் பெறுவோர் ஏமாற்றம்

Published On 2021-02-01 08:28 GMT   |   Update On 2021-02-01 08:28 GMT
கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்திருப்பதாக நிதி மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல் இந்த ஆண்டும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பதுதான் சாமானிய மக்களின் கேள்வியாக இருந்தது. 

கடைசியாக, 2014-15ம் ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதற்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில், வருமான வரி செலுத்துவதில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோதும், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யவில்லை. மாறாக, வரி சதவீதம் குறைக்கப்பட்டது. இது வரி செலுத்துவோருக்கு ஆறுதலாக அமைந்தது.

இந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் 75 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு மட்டும் நிபந்தனைளுடன் வரிக்கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்திருப்பதாகவும், 2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது என்றும் கூறினார். ஆனால், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது, மாத சம்பளம் பெறுவோருக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
Tags:    

Similar News