செய்திகள்
நரேந்திர சிங் தோமர்

புதிய வேளாண் சட்டங்கள் குறித்த சரத்பவாரின் விமர்சனத்துக்கு மத்திய மந்திரி பதிலடி

Published On 2021-01-31 23:50 GMT   |   Update On 2021-01-31 23:50 GMT
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்கள் குறித்து விமர்சித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் பதிலடி கொடுத்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுமாறு விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் முன்னாள் வேளாண் மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவாரும் இந்த சட்டங்களால் பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், மண்டி அமைப்பு முறையை பலவீனப்படுத்தி விடும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அவர்,, உணவு தானிய சேமிப்பு வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், பெரு நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக பொருட்களை வாங்கி சேமித்து வைத்து, அதிக விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளார்.

சரத்பவாரின் இந்த கருத்துகளுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

பெரு நிறுவனங்கள் மீதான இந்த அச்சம் அடிப்படையற்றது. அத்தியாவசிய பொருட்கள் சட்டப்படி போர், பஞ்சம், அசாதாரண விலை உயர்வு, தேசிய பேரிடர் போன்ற காலகட்டங்களில் அரசு தலையிட முடியும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கும், யாருக்கும் விற்பதற்கு புதிய சட்டங்கள் வழிவகை செய்துள்ளன.

இதன் மூலம் விலையில் போட்டி ஏற்பட்டு சிறந்த விலையை பெற முடியும். இது குறைந்தபட்ச ஆதரவு விலை அமைப்பை பாதிக்காது. அதைப்போல புதிய சூழியல் அமைப்பின் கீழ், மண்டி அமைப்புகள் பாதிக்கப்படாது. மாறாக அதிக போட்டி நிறைந்ததாக, சேவை, கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்களில் அதிக திறன் மிகுந்ததாக மாறிவிடும்.

பவாரை போன்ற ஒரு மூத்த தலைவரிடம் இருந்து இந்த விமர்சனம் வருவது வியப்பாக இருக்கிறது. இந்த சட்டம் பற்றிய உண்மைகளை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என நம்புகிறேன். தற்போது சரியான உண்மைகளை எடுத்துரைத்துள்ளேன். அதன் மூலம் அவர் தனது நிலையை மாற்றிக்கொள்வார் எனவும், இந்த உண்மைகளை விவசாயிகளுக்கு விளக்குவார் எனவும் நம்புகிறேன்.

இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News