செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் - டெல்லி காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2021-01-31 17:48 GMT   |   Update On 2021-01-31 17:48 GMT
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய டெல்லி காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதுடெல்லி:

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதன்பின், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக பொறுப்பேற்குமாறு கட்சித் தொண்டர்கள் பலமுறை அழைப்பு விடுத்தும் அதனை ராகுல் காந்தி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இன்று பொதுக்கூட்டம் நடத்தினர். அந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் பேசுகையில், நாட்டின் குழப்பமான மற்றும் ஆபத்தான அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது கட்சிக்கு ராகுல் காந்தியைப் போன்ற ஒரு ஆற்றல்மிக்க மற்றும் சக்திவாய்ந்த தலைவர் தேவை என தெரிவித்தார். 

மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் குடியரசு தினத்தன்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறையை தடுக்க தவறியதற்காக உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகிய இருவரும் பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தி மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News