செய்திகள்
டிராக்டர் பேரணி வன்முறை

டெல்லி டிராக்டர் பேரணி வன்முறைக்கு பாஜகவே காரணம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Published On 2021-01-30 21:36 GMT   |   Update On 2021-01-30 21:36 GMT
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தததற்கு பா.ஜ.க.வே காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அந்த பேரணியில் வன்முறை வெடித்தததற்கு பா.ஜ.க.வே காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுராப் பரத்வாஜ் கூறியதாவது:

டெல்லியில் குடியரசு தினத்தில் நடந்த டிராக்டர் பேரணியிலும், அதற்கு பிறகு நடந்த வன்முறைகளுக்கும் பா.ஜ.க.வும், டெல்லி போலீசாருமே காரணம். விவசாயிகளின் இயக்கத்தை இழிவுபடுத்தவும், அவர்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதற்காகவும் இதை அவர்கள் நிகழ்த்தினர். இந்த தேசவிரோதிகள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட வேண்டும்.

குடியரசு தினத்தன்று விவசாயிகளின் பேரணி கிளம்புவதற்கு நீண்ட நேரத்துக்கு முன்னரே பா.ஜ.க. ஏஜெண்டான தீப் சித்துவை போலீசார் பேரணி நடத்த அனுமதித்தனர். 

இவர் செங்கோட்டையை அடைந்து அங்கே மத கொடி ஒன்றை ஏற்றுவதற்கு பா.ஜ.க.வின் அறிவுறுத்தல்படி போலீசார் அனுமதித்துள்ளனர். இதைப்போல சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் விவசாயிகள் மீது நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களும் பா.ஜ.க. குண்டர்கள்தான். 

விவசாயிகளின் போராட்டக் களங்களை தடுப்பு வேலிகள் வைத்து தனிமைப்படுத்தியிருக்கும்போது, இவர்களால் மட்டும் எப்படி உள்ளே நுழைய முடிந்தது? என கேள்வி எழுப்பினார்.
Tags:    

Similar News