செய்திகள்
முதல் மந்திரி அமரீந்தர் சிங்

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் முன்வர வேண்டும் - அமரீந்தர் சிங் வேண்டுகோள்

Published On 2021-01-29 19:54 GMT   |   Update On 2021-01-29 19:54 GMT
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் முன் வர வேண்டும், பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் கடந்த 26-ம் தேதி விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. மேலும், விவசாயிகளின் ஒரு பகுதியினர் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் தங்களின் கொடியை ஏற்றினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் பின்னர் தங்களின் பழைய போராட்டக்களங்களுக்கு திரும்பினர். அதன்படி சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் தங்கள் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

இற்கிடையே, விவசாயிகளின் போராட்டக்களத்தில் முக்கிய இடமாக கருதப்படும் சிங்கு எல்லையில் நேற்று திடீரென ஒரு மர்ம கும்பல் புகுந்து, விவசாயிகளை அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டியது.

தங்களை உள்ளூர்வாசிகள் எனக்கூறிக்கொண்ட அவர்கள், டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் தேசியக் கொடியை அவமதித்ததால், இனியும் அங்கே போராட அனுமதிக்கமாட்டோம் எனக்கூறி விவசாயிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் விவசாயிகள் மீது கற்களை வீசியும், கம்புகளைக்கொண்டு தாக்கியும் வன்முறையில் இறங்கினர். விவசாயிகளும் திருப்பி தாக்கியதால் போராட்டக் களம் போர்க்களமாக மாறியது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று வன்முறையை அடக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் வன்முறையில் ஈடுபட்ட ஒருவர் வாளால் வெட்டியதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார். உடனே போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். பின்னர் போராட்டக்களத்தை சுற்றி தடுப்புவேலிகள், காங்கீரிட் கட்டைகள், கன்டெய்னர்களை கொண்டு அரண் அமைத்த போலீசார் அதை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தனர். இதனால் சிங்கு எல்லை போராட்டக்களம் ஒரு கோட்டை போல மாறியது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்வாசிகள் என்ற போர்வையில் வந்த குண்டர்கள் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் முன் வர வேண்டும், பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் கூறுகையில், செங்கோட்டையில் வன்முறை நடந்தது எந்த இந்தியரும் பெருமை கொள்ள முடியாத ஒன்று. செங்கோட்டை நமது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் சின்னம்.

விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறுவதை நான் நம்பவில்லை. இந்த வன்முறை குறித்து விசாரணை செய்து யார் காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

மத்திய அரசு மற்றும் விவசாயிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News