செய்திகள்
சிவசேனா

விவசாயிகள் கோபப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பியது: சிவசேனா குற்றச்சாட்டு

Published On 2021-01-29 02:10 GMT   |   Update On 2021-01-29 02:10 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையை தூண்ட விவசாயிகள் கோபப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பியதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை :

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குடியரசு தினத்தன்று அவர்கள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக போலீசார் 25-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.

இந்தநிலையில் போராட்டத்தில் வன்முறை ஏற்பட விவசாயிகள் கோபப்பட வேண்டும் என்று தான் மத்திய அரசு விரும்பியது என சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் கடந்த 60 நாட்களுக்கு மேலாக அமைதியான முறையில் நடந்து கொண்டு இருந்தது. 3 புதிய சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி போராட்டக்காரர்கள் டெல்லி எல்லையில் முகாமிட்டு இருந்தனர். போராட் டத்தில் ஈடுபட்ட விவ சாயிகளிடம் எந்த பிளவும் ஏற்படவில்லை. அவர்கள் பொறுமையையும் இழக்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பெரிதாக எதுவும் செய்யவில்லை. விவசாயிகள் கோபப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பியது. அப்போது தான் வன்முறை ஏற்பட்டு அவர்களின் போராட்டம் பாதிக்கப்படும் என நினைத்தது.

ஜனவரி 26-ந் தேதி அவர்களின் விருப்பம் நிறைவேறி உள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவம் நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் சட்டத்தை கையில் எடுத்தனர் என எளிதாக கூறிவிடலாம். ஆனால் அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்துகின்றனர். அது என்ன ஆகும்? டெல்லி வன்முறைக்கு விவசாயிகளை மட்டும் காரணம் கூறுவது சரியாக இருக்காது. அரசு விரும்பியது அரங்கேற்றப்பட்டு விட்டது. ஆனால் இதனால் போலீசாரும் விவசாயிகளும் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிவசேனாவின் குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்து உள்ளது.
Tags:    

Similar News