செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் (கோப்புப்படம்)

போராட்டத்தை முடித்துக்கொண்டு, சாலைகளை காலி செய்யுங்கள்: விவசாயிகளுக்கு உ.பி. அரசு கோரிக்கை

Published On 2021-01-28 13:35 GMT   |   Update On 2021-01-28 13:35 GMT
டெல்லி - உத்தர பிரதேச மாநில எல்லையான காசிபூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உடனடியாக வெளியேறுமாறு உ.பி. நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26-ந்தேதியில் இருந்து டெல்லி மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, திக்ரி, காசிபூர் எல்லைகளும் இதில் அடங்கும்.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் ஒரு லட்சம் டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்தனர். மூன்று இடங்களில் பேரணி நடத்த டெல்லி போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

விவசாயிகள் பேரணி நேற்று முன்தினம் குடியரசுத்தினம் அன்று நடைபெற்றது. அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒரு குழுவினர் டெல்லி நகருக்குள் நுழையத் தொடங்கினர். அப்போது டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, அதன் கோபுரத்தில் விவசாய சங்கத்தின் கொடிகளை ஏற்றினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ஒருசில இடங்களில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு பேரணி வன்முறையாக மாறியது. இதில் போலீசாரும், விவசாயிகளும் காயம் அடைந்தனர்.

பேரணி முடிந்த நிலையில் அந்தந்த இடங்களில் மேலும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். சில விவசாய சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலைியல் டெல்லி - உத்தர பிரதேச மாநில எல்லையான காசிபூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் உடனடியாக போராட்டத்தை முடித்துக் கொண்டு சாலைகளில் இருந்து வெளியேற வேண்டும் என உ.பி. அரசு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நேற்றிரவே பாக்பாத் மாவட்ட நிர்வாகிகள் பேராட்ட இடத்திற்கு சென்று விவசாயிகளை காலி செய்ய வைத்துள்ளனர். ஆனால், பாதுகாப்புப்படையை பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது.

நாங்கள் எந்தவிதமான படையையும் பயன்படுத்தவில்லை. வயதான விவசாயிகள் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றனர் என பாக்பாத் கூடுதல் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை, கட்டுமான வேலை இன்னும் முடிவடையாமல் உள்ளது. அதை முடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததால் இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News