செய்திகள்
குமாரசாமி

டெல்லியில் நடந்த கலவரத்திற்கு விவசாயிகள் காரணம் இல்லை: குமாரசாமி

Published On 2021-01-28 02:19 GMT   |   Update On 2021-01-28 02:19 GMT
கலவரத்தின் பின்னணியில் வேறு சக்திகள் இருக்க வாய்ப்பு உள்ளது. டெல்லியில் நடந்த கலவரத்திற்கு விவசாயிகள் காரணம் இல்லை என்று குமாரசாமி கூறினார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் போது, நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த கலவரம் துரதிர்ஷ்டமானது. விவசாயிகளின் பெயரில் சம்பந்தப்பட்ட சக்திகள், போராட்டத்தில் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தியுள்ளன. விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தகைய விவசாயிகள் கலவரத்தில் ஈடுபட வாய்ப்பு இல்லை.

இந்த கலவரத்திற்கு விவசாயிகளை குறை கூறும் கருத்துகளை கேட்டு மனம் வேதனை அடைகிறேன். இந்த கலவரம் எப்படி நடந்தது?, ஏன் நடந்தது?, இதில் ஈடுபட்ட சக்திகள் யார்? என்பது குறித்து அறிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் விவசாயிகளை குறை சொல்வது தவறு. டெல்லியில் நடந்த கலவரத்திற்கு விவசாயிகள் காரணம் அல்ல.

விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் 4 பேரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதும் அம்பலமானது. அதில் தொடர்புடைய ஒருவரை விவசாயிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க சதி நடந்திருக்கக்கூடும். கலவரத்தின் பின்னணியில் வேறு சக்திகள் இருக்க வாய்ப்பு உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும்.

சுப்ரீம் கோர்ட்டும் இதையே கூறியுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்ப்பு எட்டப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த கலவரத்தை மத்திய அரசு தடுத்திருக்க வேண்டும். இந்த கலவரம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதும் காலம் மீறி சென்றுவிடவில்லை. நல்லிணக்க வழியே இந்த பிரச்சினைக்கு தீர்வு.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News