செய்திகள்
பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங்

டெல்லி வன்முறை : ‘அவமானத்தில் தலைகுனிகிறேன்’ - பஞ்சாப் முதல்-மந்திரி வேதனை

Published On 2021-01-27 22:37 GMT   |   Update On 2021-01-27 22:37 GMT
தேச தலைநகரில் நேற்று நடைபெற்ற சம்பவத்தால் நான் அவமானத்தில் தலைகுனிகிறேன் என பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறியுள்ளார்
சண்டிகர்:

தலைநகர் டெல்லிக்குள் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்த விவசாயிகள் பேரணியில் பல வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தேச தலைநகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சம்பவத்தால் நான் அவமானத்தில் தலைகுனிகிறேன். செங்கோட்டையில் நடைபெற்ற விஷயங்கள் நாட்டுக்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளன. விவசாயிகளின் போராட்டத்தை பலவீனப்படுத்தியுள்ளன. ஆனால் நான் தொடர்ந்து விவசாயிகளின் பக்கமே நிற்பேன். காரணம், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தவறானவை, இந்தியாவின் கூட்டமைப்புத் தன்மைக்கு எதிரானவை. செங்கோட்டை, சுதந்திர இந்தியாவின் அடையாளம். அங்கு தேசியக்கொடி ஏற்றப்படவும், நாட்டு விடுதலைக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

செங்கோட்டை சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸ் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த அரசியல் கட்சியோ அல்லது வெளிநாடோ இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கிறதா என்று மத்திய அரசும் விசாரணை நடத்த வேண்டும். பஞ்சாப் இளைஞர்களின் எதிர்காலம், அமைதியில்தான் இருக்கிறது. சமீபத்திய நிகழ்வுகளால், மாநிலத்துக்கான முதலீடுகள் குறையத்தொடங்கி இருக்கின்றன.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News