செய்திகள்
சசிகலா

சசிகலா நாளை 11 மணிக்கு விடுதலை - சட்ட நடைமுறைகள் முடிந்தன

Published On 2021-01-26 06:41 GMT   |   Update On 2021-01-26 06:41 GMT
அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்த நிலையில் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்படுகிறார்.

பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து பிப்ரவரி 15-ந் தேதி முதல் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கடந்த நவம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

இதை தொடர்ந்து அவரின் தண்டனைக் காலம் நாளை(27-ந் தேதியுடன்) நிறைவடைவதாக சிறைத்துறை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அங்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் அறிவித்துள்ளனர். விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா வெளியிட்ட அறிவிப்பில், ‘சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக நீங்கியுள்ளன. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து கொரோனா வார்டுக்கு அவரை மாற்றியுள்ளோம். அவர் எழுந்து நடக்கிறார். சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார். அவர் முழுவதும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வர ஒருவார காலம் தேவைப்படலாம்’ என தெரிவித்தார்.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தவாறு அவரிடம் கையெழுத்து பெற்று விடுதலை செய்யுமாறு சிறைத்துறையிடம் சசிகலாவின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த சிறைத்துறை நிர்வாகம், சசிகலாவை விடுதலை செய்வதற்கான ஆவணங்களை கர்நாடக உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதை தொடர்ந்து, நாளை காலை 10 மணிக்கு சசிகலாவிடம் மருத்துவமனையில் இருந்தவாறே விடுதலை செய்வதற்கான ஆணையில் சிறைத்துறை கையெழுத்து பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும். அவரது உடமைகளை வழக்கறிஞர் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் மூலம் சசிகலாவிடம் தெரிவித்தனர்.

முன்னதாக சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக உள்துறைக்கு உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. அதன்படி சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். சசிகலா விடுதலை தொடர்பான அனைத்து ஆவண பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இன்று குடியரசு தினம் பொது விடுமுறை என்பதால் நேற்றே அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்து விட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு விக்டோரியா மருத்துவமனைக்கே சென்று சிறைத்துறையினர் சசிகலாவிடம் விடுதலைக்கான கையெழுத்தை பெற்று அதன் ஒரு நகலை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவதாக தெரிவித்துள்ளனர். முன்னதாக சசிகலாவை விக்டோரியா மருத்துவ மனையிலிருந்து வேறு தனியார் மருத்துவமனைக்கு மாற்று மாறு உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால் தனியார் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனையில் வசதிகள் இருப்பதாகவும் சிறை கைதிகள் போலீஸ் காவலில் வைத்து அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்றும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துவிட்டது. விடுதலைக்கு பின்னர் சசிகலா விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை என தற்போது சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News