செய்திகள்
கோப்புப்படம்

அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு யார் பெயர் தெரியுமா?

Published On 2021-01-25 21:16 GMT   |   Update On 2021-01-25 21:16 GMT
அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு யார் பெயர் சூட்டப்படும் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
அயோத்தி:

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்ற மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம்கோர்ட்டு விசாரித்து 2019-ம் ஆண்டு, நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

அந்த நிலத்தை, ராம்லல்லாவுக்கு (குழந்தை ராமர்) வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதேநேரத்தில், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பின்படி, பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில், தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் புதிய மசூதி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில், உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள அறக்கட்டளை புதிய மசூதியை கட்ட இருக்கிறது. இதற்காக உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் இந்தோ இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையை நிறுவி உள்ளது.

புதிய மசூதி வளாகத்தில் பன்முக சிறப்பு ஆஸ்பத்திரியுடன் நர்சிங் கல்லூரியும், மருத்துவ சார்பு கல்லூரியும் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது நினைவு கூரத்தக்கது.

ஒரே நேரத்தில் 2 ஆயிரம் அமர்ந்து தொழுகை நடத்தும் வசதியுடன் பிரமாண்டமாக கட்டப்படும் இந்த மசூதிக்கு யார் பெயர் சூட்டப்படும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

இந்த மசூதிக்கு 1857-ம் ஆண்டு, ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் பங்கு பெற்றிருந்த வீரர் மவுலவி அகமதுல்லா ஷா பெயர் சூட்டப்படலாம் என தெரிய வந்துள்ளது.

அவாத் பிராந்தியத்தில் சிப்பாய் கலகத்தின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்பட்டவர் இந்த மவுலவி அகமதுல்லா ஷா ஆவார். இந்த தகவலை அறக்கட்டளையின் செயலாளர் அதர் உசேன் தெரிவித்தார்.

பாபர் மசூதிக்கு பதிலாக கட்டப்படுகிற இந்த மசூதி மவுலவி அகமதுல்லா ஷா பெயரை சுமந்து நிற்கும். பல்வேறு தரப்பில் இருந்து இந்த பெயரைத்தான் புதிய மசூதிக்கு சூட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் குவிந்து இருக்கின்றனவாம். இது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு விரைவில் அதிகாரபூர்வ முடிவு வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.

இவர் 1858-ம் ஆண்டு, ஜூன் மாதம் 5-ந் தேதி வீர மரணம் அடைந்தவர் என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அவருடைய வீர தீரம் பற்றி ஆங்கிலேய அதிகாரிகளான ஜார்ஜ் புரூஸ் மல்லேசன், தாமஸ் சீட்டன் குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News