செய்திகள்
பிரதமர் மோடி

130 கோடி இந்தியர்களும் நேதாஜிக்கு கடன்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி பேச்சு

Published On 2021-01-23 23:00 GMT   |   Update On 2021-01-23 23:00 GMT
130 கோடி இந்தியர்களும் நேதாஜிக்கு கடன்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
கொல்கத்தா:

புகழ்பெற்ற விடுதலை போராட்ட வீரரும், இ்ந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பிரதமர் மோடி நேற்று கொல்கத்தாவில் உள்ள நேதாஜியின் மூதாதையர் இல்லத்துக்கு சென்றார். அவரை நேதாஜியின் பேரன்களான சுகதா போஸ், சுமந்திரா போஸ் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கு அவர் நேதாஜியின் படுக்கை அறை, நேதாஜி பயன்படுத்திய மேஜை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மேலும் கொல்கத்தாவில் இருந்து கோமோவுக்கு தப்பி செல்ல நேதாஜி பயன்படுத்திய காரையும் பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன்கள் காட்டினர்.

நேதாஜியின் இந்த இல்லத்தில் சிறிது நேரத்தை செலவிட்ட பிரதமர் மோடி, பின்னர் அங்குள்ள விக்டோரியா நினைவிடத்தில் நடந்த நேதாஜி பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு நேதாஜியின் 125-வது பிறந்த தினத்தையொட்டி சிறப்பு தபால் தலை ஒன்றை அவர் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு முதல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு வரை ஒரு வலிமையான இந்தியாவை நேதாஜி கனவு கண்டார்.

நாமெல்லாம் அவரது காலடியை பின்பற்றுகிறோம். இன்று வடிவம் பெற்று வரும் புதிய இந்தியாவை நேதாஜி பார்த்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார்? யோசித்துப்பாருங்கள்.

இந்தியாவின் 130 கோடி குடிமக்களும் நேதாஜிக்கு கடன்பட்டுள்ளனர். இனியும் அப்படியே இருப்பார்கள். நேதாஜியின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய வலிமை தினமாக கொண்டாடுவோம்.

சுதந்திர இந்தியா நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என ஒருமுறை நேதாஜி மக்களை கேட்டுக்கொண்டார். அதைப்போலவே இந்தியா தற்சார்புடன் நடைபோடுவதை ஒருவராலும் தடுக்க முடியாது.

நமது இறையாண்மைக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்பட்டாலும், நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேச எழுந்தபோது, கூட்டத்தில் இருந்த பா.ஜனதா தொண்டர்கள் சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என தொடர்ந்து கோஷமிட்டவாறு இருந்தனர்.

இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த மம்தா பானர்ஜி, கூட்டத்தில் உரையாற்ற மறுத்து விட்டார்.

அப்போது அவர், ‘இது ஒரு, அரசு நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சியல்ல. இதில் கண்ணியம் இருக்க வேண்டும். மக்களை அழைப்பதும், அவமதிப்பதும் யாரும் ஏற்க முடியாது. எனவே நான் பேசமாட்டேன். ஜெய் பங்களா, ஜெய்ஹிந்த்’ எனக்கூறி தனது உரையை நிறுத்திக்கொண்டார்.

பிரதமர் முன்னிலையில் பா.ஜனதா தொண்டர்கள் கோஷமிட்டதும், இதனால் உரையாற்றாமல் மம்தா புறக்கணித்ததும் விழா அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News