செய்திகள்
காங்கிரஸ்

காங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்

Published On 2021-01-23 06:59 GMT   |   Update On 2021-01-23 06:59 GMT
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அதிருப்தி தலைவர்கள் மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்ய வலியுறுத்தியது மூத்த தலைவர்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று சோனியா காந்தி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர்,  உள்கட்சி தேர்தல் மற்றும் கொரோனா ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசிய போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உள்கட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக பேச்சு எழுந்த போது ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், “இப்போது உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டாம். 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த பிறகு உள்கட்சி தேர்தலை நடத்தலாம்”என்று தெரிவித்தார்.

இதற்கு அனந்தசர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “உள்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்” என்றார். இதையடுத்து அசோக் கெலாட்டும், அனந்த சர்மாவும் காரசாரமாக பேசினார்கள்.

அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் சோனியா சமரசம் செய்தார். என்றாலும் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் வாக்குவாதம் நீடித்தது. அனந்த சர்மாவுக்கு ஆதரவாக குலாம்நபி ஆசாத், முகுல் வாசினிக் ஆகியோர் குரல் கொடுத்தனர். அதேசமயத்தில் அசோக்கெலாட்டுக்கு ஆதரவாக அமரிந்தர்சிங், பூபேஸ் பாகல், ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, ஹரீஸ் ராவத் ஆகியோர் குரல் கொடுத்தனர். இதனால் சிறிது நேரம் செயற்குழு ஆலோசனையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் எதிரொலித்தன.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் உள்கட்சி தேர்தலை உடனடியாக நடத்துவது என்ற கருத்தை ஆதரித்தார். இந்த குழப்பம் சிறிது நேரம் நீடித்தது. அதன்பிறகு இதில் முடிவெட்டப்படாமல் முடித்துக்கொள்ளப்பட்டது. அதன்பிறகே தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. காங்கிரஸ் செயற்குழு  கூட்டத்தில் அதிருப்தி தலைவர்கள் மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்ய வலியுறுத்தியது மூத்த தலைவர்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News