செய்திகள்
மந்திரி சுதாகர்

சுகாதாரம், மருத்துவ கல்வி துறைகளை ஒன்றிணைக்க வேண்டும்: மந்திரி சுதாகர்

Published On 2021-01-23 02:08 GMT   |   Update On 2021-01-23 02:08 GMT
சுகாதாரம், மருத்துவ கல்வி துறைகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று மந்திரி சுதாகர் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1,774 பேருக்கு கோவேக்சினும், மீதம் உள்ளவர்களுக்கு கோவிஷீல்டும் போடப்பட்டு இருக்கிறது. இதில் 3.5 சதவீதம் பேருக்கு லேசான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரத்து 908 பேர் தடுப்பூசி பெற தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இதில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 591 பேர் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். இதில் 75 ஆயிரத்து 318 பேர் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்கள் மற்றும் அந்த வார்டுகளில் பணியாற்றியவர்கள். கர்நாடகத்திற்கு மேலும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 240 டோஸ் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி இன்று (அதாவது நேற்று) வருகிறது.

தடுப்பூசி பெற்றால் கொரோனா பீதியில் இருந்து தப்பிக்க முடியும். சில தவறான தகவல் காரணமாக தடுப்பூசி பெற தயங்குகிறார்கள். கர்நாடகத்தில் 2-வது கட்டமாக 2 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இலாகா ஒதுக்கீடு விஷயத்தில் என்னிடம் இருந்த மருத்துவ கல்வி துறை பறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரியுடன் பேசுவேன். முன்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி துறைகள் வெவ்வேறாக இருந்ததால் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் அந்த 2 துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, எனக்கு ஒதுக்கப்பட்டது. அதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இப்போது மீண்டும் அந்த துறைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி ஆகிய துறைகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் வலியுறுத்துவேன். கொரோனா 2-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள 2 துறைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டியது அவசியம். நாங்கள் அனைவரும் நண்பர்கள். முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பக்க பலமாக நிற்போம். தற்கொலைக்கு சமமான முடிவை எடுத்து பா.ஜனதாவுக்கு வந்தேன்.

சிக்பள்ளாப்பூரில் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். கல் குவாரிகளில் ஜெலட்டின் குச்சிகளை பாறைகளில் குழி தோண்டி வைத்து வெடிக்க செய்யப்படுகிறது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் உண்டாகி பாதிப்புகள் ஏற்படுகின்றன. அப்பாவி மக்கள் உயிரிழக்கிறார்கள்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News