செய்திகள்
விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்கள் விஷயத்தில் இறங்கி வந்த மத்திய அரசு... மாற்றத்திற்கான முக்கிய காரணங்கள்

Published On 2021-01-22 10:09 GMT   |   Update On 2021-01-22 16:53 GMT
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லைகளில் விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டம், கோரிக்கையை வென்றெடுப்பதில் இருந்த உறுதிப்பாடு ஆகியவை, மத்திய அரசின் அணுகுமுறையை மாற்றியிருக்கிறது.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்கள் விஷயத்தில், விவசாயிகளின் உறுதியான போராட்டம் தலைநகரை அதிர வைத்துள்ளது. ஆரம்பகாலத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதன்பின்னர் படிப்படியாக போராட்டத்தின் தீவிரம் குறைந்து, ‘நாடு தழுவிய இயக்கம்’ என்ற நிலையை எட்டவில்லை. 

ஆனாலும், பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மனம் தளரவில்லை. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம், கோரிக்கையை வென்றெடுப்பதில் இருந்த உறுதிப்பாடு ஆகியவை, மத்திய அரசின் அணுகுமுறையை மாற்றியிருக்கிறது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது, என தொடர்ந்து பிடிவாதமாக இருந்த மத்திய அரசு, இப்போது சற்று இறங்கி வந்திருக்கிறது. 3 வேளாண் சட்டங்களையும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைக்கிறோம், என்கிறது அரசு. 

மத்திய அரசின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக சிலவற்றை சொல்லலாம்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பது மிகவும் அரிது. அந்த வகையில், விவசாயிகளின் கடும் எதிர்ப்பையடுத்து, வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.



விவசாயிகளின் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும், இருதரப்பும் பேசி தீர்வு காணவேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்ட மசோதாக்கள் மீது இன்னும் அதிகமாக விவாதங்கள் நடத்தியிருக்கலாம், எதிர்ப்புகள் எழுந்தபோது தேர்வுக்குழுவுக்கு அனுப்பியிருக்லாம் என சில தலைவர்கள் கூறி உள்ளனர். இப்படி செய்யும்பட்சத்தில் சட்டங்களுக்கான எதிர்ப்பு குறையும் என்ற கருத்தையும் அவர்கள் கூறி உள்ளனர். இது அரசாங்கத்தை யோசிக்க வைத்துள்ளது.

இதேபோல் குடியரசு தினத்தன்று, விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து, டெல்லி காவல்துறை தான் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மத்திய அரசுக்கு, இது ஏமாற்றத்தை அளித்தது.

அடுத்த காரணம்தான் மிகவும் முக்கியமானது. பாராளுமன்றக் கூட்டத் தொடர், வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் நிச்சயம் எதிரொலிக்கும். இந்த பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, அவையை முடக்கும் சூழ்நிலை உள்ளது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளுடன், சில மாநில கட்சிகளும், விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது. 

இந்த தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்வதைவிட, சில மாதங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைத்து, தீர்வுக்கான பாதையை தேடலாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.
Tags:    

Similar News