செய்திகள்
மந்திரி வர்ஷா கெய்க்வாட்

ஏப்ரல், மே மாதங்களில் 12, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு: மந்திரி வர்ஷா கெய்க்வாட்

Published On 2021-01-22 02:20 GMT   |   Update On 2021-01-22 02:20 GMT
மகாராஷ்டிராவில் ஏப்ரல், மே மாதங்களில் 12, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் செயல்படாமல் இருந்தன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடந்து வந்தன. இந்தநிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால் மும்பை உள்ளிட்ட சில பகுதிகளில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதேபோல போல உள்ளாட்சி நிர்வாகம் அனுமதிக்கும் இடங்களில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 27-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மும்பை, தானேயில் மறு உத்தரவு வரும் பள்ளிகள் திறக்கப்படாது என மாநகராட்சி நிர்வாகங்கள் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே 12, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தேதியை கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார். இதன்படி ஏப்ரல் 23-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற உள்ளது.

10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 29 தொடங்கி மே 31-ந் தேதி வரை நடக்கிறது. வழக்கமாக 12, 10-ம் வகுப்பு பொது தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு தேர்வுகள் தாமதமாக நடக்க உள்ளது.

இதேபோல 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 22 வரையும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 9 முதல் 28 வரை நடைபெறும் எனவும் வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.
Tags:    

Similar News