செய்திகள்
சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார்

கர்நாடகாவில் சோகம் - வெடிபொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி வெடித்து 6 பேர் பலி

Published On 2021-01-21 20:15 GMT   |   Update On 2021-01-21 20:15 GMT
கர்நாடகாவில் சிவமொக்கா அருகே வெடி பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி வெடித்து 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர்.
பெங்களூரு: 

கர்நாடக மாநிலம் சிவமொக்கா தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகே ரெயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது.

நேற்று இரவு அந்த கல்குவாரிக்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி ரெயில்வே கிரசர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. 

இதில் லாரியில் இருந்த வெடி பொருட்கள் அனைத்து வெடித்து சிதறின. லாரியும் வெடித்து சிதறி சுக்கு நூறாகியது. மேலும் லாரி டிரைவர் மற்றும் லாரியில் பயணித்து வந்த தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். டிரைவர் உள்பட 6-க்கும் மேற்பட்டோர் இந்த வெடி விபத்தில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தகவல் அறிந்த சிவமொக்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது 6 பேரின் உடல்களைக் கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. விபத்து எப்படி ஏற்பட்டது என்பது உள்பட வேறு எந்த தகவல்களும் உடனடியாக கிடைக்கவில்லை. 

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிர் பலி மேலும் அதிகரிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

இதுகுறித்து சிவமொக்கா புறநகர் தொகுதி எம்.எல்.ஏ. அசோக் நாயக் கூறுகையில், சிவமொக்கா அருகே பயங்கர சத்தம் கேட்டது. அது வெடி பொருட்களை ஏற்றி வந்த லாரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 6 பேர் இறந்துவிட்டதாக தெரிகிறது. அந்த பயங்கர சத்தம் என் வீடு உள்பட சிவமொக்கா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதுபோல் இருந்தது என தெரிவித்தார். 
Tags:    

Similar News