செய்திகள்
ராஜேஷ் தோபே

2 கொரோனா தடுப்பூசிகளும் முற்றிலும் பாதுகாப்பானவை: மந்திரி ராஜேஷ் தோபே

Published On 2021-01-21 02:46 GMT   |   Update On 2021-01-21 02:46 GMT
2 கொரோனா தடுப்பூசிகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், சந்தேகப்பட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
மும்பை :

மராட்டியத்தில் கோ-வின் செயலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் சுகாதார பணியாளர்கள் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களில் யாருக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை.

இரண்டு தடுப்பு மருந்துகளுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்வதில் பயனாளிகள் இடையே சற்று குழப்பம் நிலவுகிறது. இதுவரை போட்டுக்கொண்டவர்களுக்கு என்ன விளைவு ஏற்படுகிறது என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். இரண்டு தடுப்பு மருந்துகள் பற்றியும் எந்த சந்தேகமும் வேண்டாம். அவை முற்றிலும் பாதுகாப்பானவை.

பயனாளிகளிடம் உள்ள பயத்தை போக்கும் வகையில் அரசு தேவையான விளக்கத்தை அளிக்கும். தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு வீடியோ தகவல் அனுப்பப்படும்.

வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, சனிக்கிழமை தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News