நாடு முழுவதும் கடந்த 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அந்நாளில் அசாமில் 1000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கடந்த 16-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கொரோனா தடுப்பூசி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரிசரின் தப்பவெப்பநிலை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் என வைக்கப்படிருந்த போதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரிசரின் தட்பவெப்பநிலை குறிப்பிட்டதை விட அதிக அளவு குளிரை உருவாக்கியுள்ளது. இதனால், பிரிசரில் இருந்த 1,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து குளிரில் உறைந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உறைந்த நிலையில் இருந்த 1,000 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து டோஸ்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட தடுப்பூசி மருந்துகளை மீண்டும் பயன்படுத்தலாமா? தடுப்பூசியின் செயல்திறன் குறையாமல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசோதனை மையத்திற்கு தடுப்பூசி மருந்து
கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த முதல் நாளான 16-ம் தேதி பிரிசரில் வைக்கப்பட்டிருந்த 1,000 கொரோனா தடுப்பூசி மருந்து டோஸ்கள் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.