செய்திகள்
உச்ச நீதிமன்றம்

விவசாயிகள் டிராக்டர் பேரணி- மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published On 2021-01-20 07:48 GMT   |   Update On 2021-01-20 07:48 GMT
விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மனு மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் முற்றுகை போராட்டம் இன்று 57-வது நாளாக நீடித்து வருகிறது.  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கத் தலைவர்களுடன் 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரமாக்கி வருகின்றனர். 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. டெல்லிக்கு வெளியே போராட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று போலீசார் கூறுகின்றனர். அதை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி நகருக்குள்தான் போராட்டத்தை நடத்துவோம் என்று பிடிவாதமாக கூறி வருகிறார்கள்.

டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்த அனுமதி அளிக்கும்படி டெல்லி காவல்துறை உயர் அதிகரிகளை சந்தித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். டெல்லியில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிப்பதா, வேண்டாமா? என்பது தொடர்பாக காவல்துறை முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறிவிட்டதால், காவல்துறையிடம் முறைப்படி அனுமதி கோரி உள்ளனர்.  

இந்நிலையில் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்த திட்டமிட்டிருக்கும் டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மத்திய அரசின் வழக்கு மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான பிற வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய இடைக்கால மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஏற்கனவே கூறியதுபோன்று, விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். முடிவு எடுக்கவேண்டிய அதிகாரிகளே நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்திருப்பது ஏற்க முடியாதது, எனவே மத்திய அரசு தனது மனுவை திரும்ப பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News