செய்திகள்
பிரதமர் மோடி

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்- அனைத்து கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு

Published On 2021-01-20 04:11 GMT   |   Update On 2021-01-20 04:11 GMT
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரையிலும், இரண்டாவது அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. 

காலை 9 மணிமுதல் 1 மணி வரை மாநிலங்களவை கூட்டத்தொடரும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மக்களவை கூட்டத்தொடரும் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தொடரில் கேள்விநேரம் மற்றும் பூஜ்ஜியம் நேர விவாதத்திற்கு (ஜீரோ ஹவர்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். அதன்படி வரும் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

இந்நிலையில், வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதேபோல் அன்றைய தினம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டமும் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News