சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிரசாத பார்சல்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரி கூறினார்.
சபரிமலை மகர விளக்கு சீசனில் தபால் மூலம் 44 ஆயிரம் பிரசாத பார்சல் விற்பனை
பதிவு: ஜனவரி 20, 2021 08:24
சபரிமலை சன்னிதானத்தில் இருந்து சரம்குத்தி நோக்கி, அய்யப்ப சாமியை பவனியாக எடுத்து சென்ற போது எடுத்த படம்
சபரிமலை :
திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அதிகாரி ராஜேந்திர பிரசாத் சபரிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனில் கொரோனா பரவாமல் தடுக்க சாமியை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அரவணை உள்பட பிரசாதங்களை தபால் மூலமாக நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களுக்கு அனுப்ப திருவிதாங்கூர் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டது.
அதை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும், அதற்கான முன்பதிவுக்கான வசதிகள் செய்யப்பட்டது. ஒரு பிரசாத பார்சலின் விலை ரூ.450 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி தபால் மூலமாக 43 ஆயிரத்து 902 பிரசாத பார்சல்கள் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடியே 97 லட்சத்து 55 ஆயிரத்து 900 கிடைத்து உள்ளது. அதே போல் தபால் துறைக்கு 87 லட்சத்து 80 ஆயிரத்து 400 வருமானம் கிடைத்தது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படாத காரணத்தால்.இனி வரும் மாத பூஜை நாட்களிலும் தபால் மூலம் முன்பதிவு அடிப்படையில் பிரசாதங்கள் பக்தர் களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நடப்பு சீசனில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 175 டின் அரவணை விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம், திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ரூ.5 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 170 வருமானமாக கிடைத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :