செய்திகள்
மந்திரி சுதாகர்

தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுவதாக வரும் தகவல் உண்மை அல்ல: மந்திரி சுதாகர்

Published On 2021-01-20 02:37 GMT   |   Update On 2021-01-20 02:37 GMT
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வெற்றிகரமாக நடப்பதாகவும், தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுவதாக வரும் தகவல்கள் உண்மை அல்ல என்றும் மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால், அதனை போட்டு கொள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் விரும்பவில்லை, இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக மாநிலத்தில் குறைந்த அளவிலான ஊழியர்களே தடுப்பூசியை போட்டு கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக மந்திரி சுதாகர் நேற்று தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

மாநிலத்தில் கடந்த 16-ந் தேதியில் இருந்து முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் தயக்கம் காட்டுவதாக பொய் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அது உண்மை அல்ல. நாட்டிலேயே நேற்று (அதாவது நேற்று முன்தினம்) கர்நாடகத்தில் தான் அதிகஅளவு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டு கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உண்மைக்கு புறம்பானது.

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசியை பல டாக்டர்கள் போட்டு கொண்டுள்ளனர். தடுப்பூசி மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக, அதனை போட்டுக் கொண்ட டாக்டர்களே கூறியுள்ளனர். எனவே கொரோனா தடுப்பூசி தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசி குறித்து யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை, மிகவும் பாதுகாப்பானது. வதந்திகளை யாரும் காது கொடுத்து கேட்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News