செய்திகள்
ஜே.பி.நட்டா

ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்?: ராகுல்காந்திக்கு ஜே.பி.நட்டா கேள்வி

Published On 2021-01-20 01:43 GMT   |   Update On 2021-01-20 01:43 GMT
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் என்று ராகுல்காந்திக்கு ஜே.பி.நட்டா கேள்வி விடுத்துள்ளார்.ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்?: ராகுல்காந்திக்கு ஜே.பி.நட்டா கேள்வி
புதுடெல்லி :

அருணாசலபிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடியாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சீனா பற்றி பொய் சொல்வதை ராகுல்காந்தியும், அவருடைய குடும்பமும், காங்கிரஸ் கட்சியும் எப்போது நிறுத்துவார்கள்? அருணாசலபிரதேசத்தில் ராகுல்காந்தி குறிப்பிடும் இடம் உள்பட மொத்தம் ஆயிரக்கணக்கான சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனாவுக்கு பண்டித நேருதான் தானமாக கொடுத்தார்.

ராகுல்காந்தி தனது மாதாந்திர விடுமுறையில் இருந்து இப்போதுதான் திரும்பி இருக்கிறார். அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். சீனாவுடனும், அதன் கம்யூனிஸ்டு கட்சியுடனும் காங்கிரஸ் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் எண்ணம் அவருக்கு இருக்கிறதா?

அவரது குடும்ப அறக்கட்டளைகளுக்கு சீனா கொடுத்த நன்கொடையை திருப்பித் தருவாரா? அல்லது சீன பணத்தில்தான் கட்சி கொள்கைகள் வகுக்கப்படுமா?

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை ராகுல்காந்தி ரசித்து பாா்த்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், ஜல்லிக்கட்டை தடை செய்து, தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? இந்திய கலாசாரம் குறித்து அவர் பெருமைப்படவில்லையா?

கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டின் மனஉறுதியை ராகுல்காந்தி சீர்குலைத்து வருகிறார். தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், நமது விஞ்ஞானிகளை அவர் ஒருதடவையாவது பாராட்டி இருக்கிறாரா?

விவசாயிகளையும் ராகுல்காந்தி தவறாக வழிநடத்தி வருகிறார். மண்டிகளை மூடப்போவதாக பொய் சொல்கிறார். காங்கிரஸ் ஆட்சியின்போது, சுவாமிநாதன் குழு அறிக்கையை பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருந்தது ஏன்? குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தாதது ஏன்?

காங்கிரஸ் ஆட்சி நடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் ஏழைகளாகவே இருந்தது ஏன்? எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் அவர்கள் மீதுதான் அனுதாபம் பிறக்குமா?

இவற்றுக்கெல்லாம் ராகுல்காந்தி பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
Tags:    

Similar News