செய்திகள்
கோப்புப்படம்

45 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்குகிறது - பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு கடிதம்

Published On 2021-01-19 21:21 GMT   |   Update On 2021-01-19 21:21 GMT
மத்திய அரசு மேலும் 45 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி வாங்குகிறது. இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் கோவேக்சின் தடுப்பூசி 55 லட்சம் டோஸ்கள் வாங்குவதற்கு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் முதல் தொகுதி தடுப்பூசி டோஸ்களை விஜயவாடா, கவுகாத்தி, பாட்னா, சென்னை, டெல்லி, குருசேத்ரா, பெங்களூரு, புனே, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், லக்னோ போன்ற நகரங்களுக்கு அந்த நிறுவனம் அனுப்பி வைத்து உள்ளது.

இதில் 16.5 லட்சம் டோஸ்களை மத்திய அரசுக்கு நன்கொடையாக அளித்திருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து மேலும் 45 லட்சம் டோஸ்கள் கோவேக்சின் தடுப்பூசி வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதற்கான ஆர்டர் இறுதி செய்யப்பட்டவுடன் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்த 45 லட்சம் டோஸ் தடுப்பூசிகளில் மொரீஷியஸ், பிலிப்பைன்ஸ், மியான்மர் போன்ற இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு நல்லெண்ண நடவடிக்கையாக 8 லட்சத்துக்கு அதிகமான டோஸ்கள் வழங்கப்படுகிறது. இது இலவசமாக கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நாடு முழுவதும் செயல்படுத்தி வரும் உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்வதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.
Tags:    

Similar News