செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 6-ந்தேதி குடகு வருகை

Published On 2021-01-19 02:47 GMT   |   Update On 2021-01-19 02:47 GMT
ஜெனரல் திம்மய்யா அருங்காட்சியகத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 6-ந்தேதி குடகிற்கு வருகிறார்.
குடகு :

குடகு மாவட்டம் மடிகேரியை சேர்ந்தவர் ஜெனரல் திம்மய்யா. ராணுவத்தில் பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவருடைய சேவையை பாராட்டும் வகையில், மடிகேரியில் அவருடைய பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது.

தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ளது. இதனால் பிப்ரவரி மாதம் 6-ந்தேதி ஜெனரல் திம்மய்யா அருங்காட்சியகத்தின் திறப்பு விழா நடக்க உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 6-ந்தேதி குடகிற்கு வருகிறார். தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மடிகேரிக்கு வருகிறார். பின்னர் அவர், ஜெனரல் திம்மய்யா அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பேச உள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி வருகையையொட்டி மடிகேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று தெற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரவீன் மதுகர் பவார் மடிகேரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது ஜனாதிபதி வருகையின்போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வந்திறங்கும் இடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குடகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உடன் இருந்தார்.
Tags:    

Similar News