செய்திகள்
கோப்புப்படம்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழுவின் முதல் கூட்டம் நாளை நடக்கிறது

Published On 2021-01-17 22:47 GMT   |   Update On 2021-01-17 22:47 GMT
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழுவின் முதல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் குளிருக்கு மத்தியிலும் நடத்தி வரும் இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 9 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், போராட்டத்துக்கு தீர்வு இன்னும் ஏற்படவில்லை. எனவே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இதற்கிடையே வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த உத்தரவு வரும் வரை மேற்படி வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உள்ளது.

மேலும் இந்த சட்டங்கள் தொடர்பாக சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, இந்த குழு முன் விவசாயிகள் தங்கள் கவலைகளை தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்த குழுவில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மன், ஷேத்காரி கங்கதனா தலைவர் அனில் கன்வாட், வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாதி, பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

எனினும் இந்த குழுவில் இருந்து பூபிந்தர் சிங் மன் சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக புதிய உறுப்பினர் இன்னும் நியமிக்கப்படவில்லை.

அதேநேரம் இந்த சிறப்பு குழுவை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள சிறப்பு குழுவின் முதல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த தகவலை அனில் கன்வாட் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாங்கள் (சிறப்பு குழு) 19-ந் தேதி டெல்லி பூசா வளாகத்தில் கூடுகிறோம். இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

இந்த குழுவின் ஒரு உறுப்பினர் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய உறுப்பினரை சுப்ரீம் கோர்ட்டு நியமிக்கவில்லை என்றால் மீதமுள்ள உறுப்பினர்கள் கூடி பேசுவோம்.

எங்களுக்கான விதிமுறைகளை பெற்று இருக்கிறோம். அதன் அடிப்படையில் 21-ந ்தேதி முதல் எங்கள் பணிகளை தொடங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு குழு அமைத்த பின்னரும், விவசாயிகளுடன் மத்திய அரசு பேசுவது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த பிரச்சினைக்கு எங்கள் மூலமோ அல்லது அரசின் பேச்சுவார்த்தை மூலமோ தீர்வு ஏற்பட்டு, போராட்டம் முடிவு பெற்றால் மகிழ்ச்சிதான். அரசு தனது பேச்சுவார்த்தையை தொடரட்டும். எங்களுக்கு ஒரு கடமை வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News