செய்திகள்
தன்ஷன் பால்

போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் மீது என்ஐஏ வழக்குப்பதிவு: விவசாய சங்கங்கள் கண்டனம்

Published On 2021-01-17 13:34 GMT   |   Update On 2021-01-17 13:34 GMT
விவசாயிகள் போராட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பவர்கள் அல்லது ஆதரவு கொடுப்பர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்வதாக விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி மாநில எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 9 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதுதான் ஒரே வழி என விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனால், சட்டங்களை திரும்பப்பெறுவதை தவிர்த்து மற்ற எந்த உடன்பாடுக்கும் மத்திய அரசு தயார் என மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் உறுதியாக தெரிவித்துவிட்டார்.

உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையே வருகிற 26-ந்தேதி இந்திய குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் இருந்து இன்று விவசாயிகள் டிராக்டரில் புறப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேசிய புலானாய்வு முகமை விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும், விவசாயிகளின் ஒரு அங்கமாக இருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். அனைத்து விவசாயிகள் சங்கங்களும் இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். எந்த வழிகளில் எல்லாம் இதை எதிர்க்க வாய்ப்புள்ளதோ, அந்த வகையில் எதிர்த்து போராடுவோம் என கிரந்திகரி கிஷான் சங்கம் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News