செய்திகள்
புதிய பாராளுமன்ற மாதிரி வரைபடம்

புதிய பாராளுமன்ற கட்டுமான பணி தொடங்கியது- அடுத்த ஆண்டு முடியும்

Published On 2021-01-16 05:43 GMT   |   Update On 2021-01-16 05:43 GMT
ரூ.971 கோடியில் பிரமாண்டமான புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கியது. அடுத்த ஆண்டு இது முடியும்.
புதுடெல்லி:

தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு ஏறத்தாழ 100 ஆண்டுகள் ஆகி விட்டது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்தது.

புதிய பாராளுமன்ற கட்டிடம், முக்கோண வடிவத்தில் அமையும். 2026-ம் ஆண்டுக்கு பிறகு சபைகளை விரிவுபடுத்திய நிலையில், மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமர்வதற்கு ஏற்ற வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. மக்களவையில் கூட்டு கூட்டம் நடத்துவதற்கு ஏற்ப 1,272 இருக்கைகள் வரை போடும் வசதி இருக்கும்.

தற்போதைய பாராளுமன்ற வளாகத்திலேயே புதிய பாராளுமன்ற கட்டிடமும் அமைவது குறிப்பிடத்தக்கது.

நவீன வசதிகளை கொண்ட இந்த பாராளுமன்ற கட்டிடத்தை ரூ.971 கோடியில கட்டி தருவதற்கு டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்கிடையே புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அடிக்கல் நாட்டுவதற்கு அனுமதி கொடுத்தது.

அதே நேரத்தில், கட்டிடத்தின் கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்பாக பாரம்பரிய குழு உள்ளிட்ட பிற தொடர்புடைய  அதிகாரிகளின் முன் அனுமதியை பெறுமாறு மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. மத்திய அரசும், அவ்வாறு செய்வதாக உறுதி அளித்தது.

அதைத் தொடர்ந்து புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 10-ந் தேதி அடிக்கல் நாட்டினார்.

இந்த பாராளுமன்ற கட்டிடம் சென்டிரல் விஸ்டா என்னும் மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது.

புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான தனது ஒப்புதலை 14 உறுப்பினர்களை கொண்ட பாரம்பரிய குழு, இந்த வார தொடக்கத்தில் அளித்தது. இந்த குழு, மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்துக்கும் பச்சைக்கொடி காட்டி விட்டது.

அதைத் தொடர்ந்து புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் பணி வெற்றிகரமாக நேற்று தொடங்கி விட்டது. இந்த பணி அடுத்த ஆண்டு நிறைவு பெறும்.

அடுத்த ஆண்டு, நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறபோது, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு எண்ணி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி டாடா புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் வர்த்தக பிரிவு தலைவருமான சந்தீப் நவலகே கூறுகையில், திறமைவாய்ந்த மனித வளம் மற்றும் பார்ம்வொர்க் (கான்கிரீட் கலவைகளை உருவாக்கும் தற்காலிக அச்சு அமைப்பு) ஆகியவற்றைக் கொண்டு, கட்டுமான அட்டவணையை விரைவுபடுத்துவதற்கான செயல்திட்டங்கள் எங்களிடம் உள்ளன. இந்த கட்டிடத்தை சரியான நேரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோகூட எங்களால் கட்டி வழங்க முடியும் என்று குறிப்பிட்டார்.
Tags:    

Similar News