செய்திகள்
மந்திரி சுதாகர்

கர்நாடகத்திற்கு 6.47 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்தது: மந்திரி சுதாகர்

Published On 2021-01-13 03:04 GMT   |   Update On 2021-01-13 03:04 GMT
கர்நாடகத்திற்கு முதல்கட்டமாக 6.47 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி பயன்படுத்த மத்திய அரசின் இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசு முதல் கட்டமாக 1.10 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி விலை ரூ.210 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு குறைவாக தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்யவில்லை.

தடுப்பூசி கொள்முதலுக்கு முதல் கட்டமாக ரூ.231 கோடி செலவு செய்துள்ளது. கர்நாடகத்திற்கு முதல் கட்டமாக 6 லட்சத்து 47 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. வருகிற 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. ஒரு மருந்து பாட்டிலை பயன்படுத்தி 10 பேருக்கு தடுப்பூசி செலுத்தலாம். ஒருவர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த தடுப்பூசியால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இது விற்பனைக்கு அல்ல என்று மருந்து பாட்டில் மீது எழுதப்பட்டுள்ளது. இதை யாரும் தவறான முறையில் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் அதே இடத்தில் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்படுவார்கள். அதன் பிறகு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

முன்னுரிமை அடிப்படையில் முதல்கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த தடுப்பூசியை பெறுவார்கள். தடுப்பூசி போடும்போது அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படும். 2-வது கட்ட தடுப்பூசிகள் பெலகாவிக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் அங்குள்ள குளிர்பதன கிடங்கில் பாதுகாத்து வைக்கப்படும்.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News