செய்திகள்
எடியூரப்பா

கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள்

Published On 2021-01-13 01:45 GMT   |   Update On 2021-01-13 01:45 GMT
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. புதிதாக 7 மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு :

கர்நாடக மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்ப பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து கர்நாடக மந்திாிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். 13-ந் தேதி (அதாவது இன்று) மந்திரிசபை விஸ்தரிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று எடியூரப்பா அறிவித்து இருந்தார். பிறகு 13 அல்லது 14-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று எடியூரப்பா கூறினார்.

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்று எடியூரப்பா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளேன். நாளை (அதாவது இன்று) பகல் 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. புதிய மந்திரிகள் யார் என்பது குறித்து ஊடகங்களில் பலரது பெயர்கள் வெளியிடப்பட்டு வருவதை நான் கவனித்தேன். அவ்வாறு நீங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம்.

நானே இன்று (நேற்று) மாலை அல்லது நாளை (இன்று) காலைக்குள் புதிய மந்திரிகளின் பெயர் பட்டியலை வெளியிடுகிறேன். மந்திரிகள் யாரேனும் நீக்கப்படுவார்களா? என்பதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். அதுபற்றி நான் இப்போதும் எதையும் கூற முடியாது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, எஸ்.அங்கார், பூர்ணிமா சீனிவாஸ், அரவிந்த் லிம்பாவளி, முனிரத்னா, எம்.எல்.சி.க்கள் ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், சி.பி.யோகேஷ்வர் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மந்திரிசபையில் உள்ளவர்களில் 3 பேரை நீக்கிவிட்டு மேலும் 3 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் எடியூரப்பா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் மந்திரிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

மந்திரிகள் பதவி ஏற்புக்கு பிறகு பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எடியூரப்பா அரசுக்கு சற்று சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மந்திரிசபை விரிவாக்கத்தையொட்டி கவர்னர் மாளிகை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக மந்திரிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இத்துடன் மந்திரிசபை காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படுவதால், இனி எம்.எல்.ஏ.க்கள் யாரும் மந்திரி பதவியை எதிர்நோக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அமையும் மந்திரிசபை, அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மந்திரி பதவி கிடைக்காதவர்கள் போர்க்கொடி தூக்கினால், அவர்களை சமாளிக்க வாரிய தலைவர் பதவி வழங்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு 14 மாதங்களில் கவிழ்ந்தது. அதன் பிறகு முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அவர் ஒருவர் மட்டுமே பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து 3 வாரங்களுக்கு பிறகு அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி 17 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு பெண் மந்திரியும் அடங்குவார்.

பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி நடைபெற்ற மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, புதிதாக 10 மந்திரிகள் பதவி ஏற்றனர். இவர்கள் அனைவரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்பதும், இவர்கள் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 4-வது முறையாக தற்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News