செய்திகள்
முதல் மந்திரி பிரமோத் சாவந்த்

மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆபத்தான நிலையை கடந்து விட்டார் - கோவா முதல்வர்

Published On 2021-01-11 19:45 GMT   |   Update On 2021-01-11 19:45 GMT
மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆபத்தான நிலையை கடந்து விட்டார் என கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
பனாஜி:

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை மந்திரியாக செயல்பட்டு வருபவர் ஸ்ரீபாத் நாயக். இவர் தனது மனைவி விஜயா நாயக் மற்றும் உதவியாளர்கள் சிலருடன் நேற்று மாலை கர்நாடக மாநிலம் எல்புரா பகுதியில் இருந்து கொஹர்னா என்ற பகுதிக்கு காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
 
மத்திய இணை மந்திரி பயணம் செய்த கார் உத்தர கன்னடா மாவட்டம் அகோலா தாலுகா ஹசோஹமி என்ற கிராமம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக், அவரது மனைவி விஜயா மற்றும் உதவியாளர்கள் 3 பேரும் காயமடைந்தனர். குறிப்பாக மத்திய மந்திரியின் மனைவி விஜயாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கார் விபத்தில் படுகாயமடைந்த மத்திய இணை மந்திரியின் மனைவி விஜயா நாயக் மற்றும் அவரது உதவியாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மத்திய இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கூடுதல் சிகிச்சை அளிப்பதற்காக மத்திய மந்திரி கோவாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக்கை கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் நேரில் சென்று பார்த்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக பிரமோத் சாவந்த் கூறுகையில், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டார், அவர் உடல் நலத்துடன் உள்ளார் என நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:    

Similar News