செய்திகள்
இந்தியா-சீனா எல்லை

எல்லை தாண்டி வந்து சிக்கிய சீன வீரரை பத்திரமாக ஒப்படைத்தது இந்திய ராணுவம்

Published On 2021-01-11 06:39 GMT   |   Update On 2021-01-11 06:39 GMT
எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்தபோது பிடிபட்ட சீன ராணுவ வீரரை, அந்த நாட்டு ராணுவத்திடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது.
புதுடெல்லி:

லடாக் எல்லையில் உள்ள பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 8ம் தேதி இந்திய ராணுவத்தினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர் நுழைவதை இந்திய ராணுவத்தினர் கண்டனர். இதனால், எல்லைதாண்டிய சீன வீரரை சுற்றிவளைத்த இந்திய ராணுவத்தினர் அந்த வீரரை பிடித்தனர்.

இதையடுத்து, பிடிபட்ட சீன வீரரிடம் இந்திய ராணுவத்தினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சீன வீரர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சீன பாதுகாப்பு படையினருக்கு இந்திய படையினர் தகவல் கொடுத்தனர். கைது செய்யப்பட்ட அந்த வீரரை இந்திய அதிகாரிகள் சீனாவிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டது. இதனையடுத்து அந்த வீரரை சீனாவிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டது. 

அதன்படி, இன்று காலை 10.10 மணியளவில் அந்த வீரர், சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். சுசுல்-மோல்டோ எல்லையில் வைத்து வீரரை ஒப்படைத்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News