செய்திகள்
டிகே சிவக்குமார்

மத்திய-மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக போருக்கு தயாராக வேண்டும்: டி.கே.சிவக்குமார்

Published On 2021-01-09 02:20 GMT   |   Update On 2021-01-09 02:20 GMT
மத்திய-மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக போருக்கு தயாராக வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. கொரோனா ஊரடங்கின்போது, மக்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால் அந்த உதவித்தொகை சரியான முறையில் போய் சேரவில்லை. பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை செயல்படுத்தவில்லை.

இந்த அரசு ஒருபுறம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மற்றொருபுறம் பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. இவற்றை நாம் ஆயுதங்களாக பயன்படுத்தி இந்த அரசுக்கு எதிராக போராட வேண்டும். உள்ளூர் அளவில் பிரச்சினைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் நேர்மறையான மாற்றங்களை செய்து வருகிறோம்.

கட்சியை முன்னிறுத்தி கட்சியை பலப்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளோம். டிரைவர்கள் உள்பட பல்வேறு அணிகளை உருவாக்க இருக்கிறோம். புகார் அணி என்றையும் ஏற்படுத்த உள்ளோம். கட்சி கூட்டங்களை மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் கட்சி அலுவலகத்திலேயே நடத்த வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் கூட்டம் நடத்தக்கூடாது.

எல்லாரையும் விட கட்சி பெரியது. எம்.எல்.ஏ.வாக ஒருவர் வெற்றி பெற்றவுடன் அவர் கட்சியை விட பெரியவர் என்று யாரும் எண்ணக்கூடாது. அனைவரும் கட்சிக்கு கீழ்படிந்து நடப்பவர்களாக இருக்க வேண்டும். சில பகுதிகளில் நமது கட்சிக்கு அலுவலகம் இல்லை. அத்தகைய இடங்களில் கட்சி அலுவலகங்கள் கட்டப்படும். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும்.

பூத் மட்டத்தில் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு உள்ள விஷயங்களை சரியான முறையில் கவனிக்க முடியும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. இதற்கு எதிராக நாம் போர் தொடங்க வேண்டும். இதற்கு நிர்வாகிகள் தயாராக வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

இந்த மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பட்டீல், செயல் தலைவர்கள் சலீம் அகமது, சதீஸ் ஜார்கிகோளி, ஈஸ்வர் கன்ட்ரே உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News